2. இந்திய மரபில் நாத்திகம்
“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்பது மிகச் சிறந்த சொலவடை. ‘உண்மையைக் கண்டவர்கள் இதுவரை அதுபற்றிச் சொன்னதில்லை, கண்டதாக எடுத்துரைப்பவர்கள் கண்டதில்லை’


“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்பது மிகச் சிறந்த சொலவடை. ‘உண்மையைக் கண்டவர்கள் இதுவரை அதுபற்றிச் சொன்னதில்லை, கண்டதாக எடுத்துரைப்பவர்கள் கண்டதில்லை’ என்பது இதன் பொருள். சற்று விளக்கமாகப் பார்த்தால், உண்மை யாது என்பதை ஆராய்ந்து அறிந்தவர்கள் அதுபற்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முழுமையாக விளக்கிச் சொல்லவில்லை; அதேபோல் உண்மை பற்றிய வியாக்கியானங்களைக் கொடுப்பவர்கள் அனைவராலும் ஏற்கும் வகையில் அதனைக் கூறாததால், அவர்களும் முழுமையாகக் கண்டதில்லை என்று இதனைப் புரிந்துகொள்ளலாம்.
ஆக, உண்மை இதுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக இல்லாததால், ஆய்வுகளும் தொடர்கின்றன. தத்துவ மோதல்களும் நீடிக்கின்றன. இந்த மோதல்களில் முதன்மையானது, கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதே. பெரும்பாலானவர்கள், இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஆதாரமாக இருப்பது, இதையெல்லாம் ஆட்டுவிப்பது ஆண்டவன் என்று கருதுகிறார்கள். இந்தக் கடவுள் கோட்பாட்டைத்தான் அவர்கள் உண்மை என்று கருதுகிறார்கள். ஆனால் அவ்வாறாகிய கடவுளை மறுத்து, அனைத்தும் இயற்கையே என்று வாதிப்போரும் உண்டு. இவ்வாறான கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் என்று பொதுவாகக் கூறப்படுகிறார்கள்.

ஆங்கிலத்தில் ‘எத்திஸ்ட்’ என்ற சொல், கடவுள் மறுப்பாளர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலச் சொல்லான THEE (தீ) ஆண்டவனைக் குறிக்கிறது. அதுபற்றிய இஸம், அதாவது கோட்பாடு தீயிஸம் ஆகும். அதற்கு எதிர்மறையான எத்திஸம், ஆண்டவன் இல்லை என்று கூறுவது.
ஆனால், பாரதத்தின் விசேஷ குணம் இந்தப் பிரபஞ்ச உண்மையை அதாவது உட்பொருளை கடவுள்தான் என்று அடித்துச் சொல்லவில்லை. ஏனெனில், இதுவரைக்குமான ஆய்வுகளில் முடிவான முடிவு என்று எதுவும் கிடைக்கவில்லை என்பதை பாசாங்கு செய்யாமல் பக்குவமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆகையால், பாரதப் பாரம்பரியத்தில் நாத்திகம் என்று கூறுவது ஆண்டவனை மறுப்பது அல்ல. ஆண்டவனை மறுப்பதற்கு நிரீஸ்வரவாதம் என்று பெயர்.
அப்படியானால், இந்தியத் தத்துவ மரபில் நாத்திகம் என்பதன் பொருள் என்ன? நாத்திகம் என்ற சொல், ந அஸ்தி என்ற இரண்டு சொற்களின் கூட்டில் உருவானது. பின்னொட்டான இகம் என்பது இஸத்தைக் குறிக்கிறது. முன்குறிப்பிட்ட இரண்டு சொற்களில், அஸ்தி என்பது இருக்கிறது என்பதையும், ந என்பது இல்லை என்பதையும் குறிக்கிறது. என்ன இருக்கிறது? என்ன இல்லை?
இந்திய ஆன்மிகத் தத்துவங்கள், இந்த உடலையே நான் என்று கருதுவதில்லை. நமது உடலில் இருந்து வேறுபட்ட ஓர் தன்மையின் இருப்பை அவை கூறுகின்றன. அதுதான் ஆத்மா. இந்த ஆத்மா அதாவது ஆன்மாவின் பயணமே வாழ்க்கை. அந்த வாழ்க்கை மரணத்தோடு முடிந்துவிடவில்லை. மரணத்துக்குப் பின்பும் தொடர்கிறது. ஏன்? அதற்கு ஓர் இலக்கு, லட்சியம் இருக்கிறது. அந்த இலக்குதான் முக்தி (விடுதலை). ஆன்மா முக்தியடைவதே வாழ்க்கையின் மிகச் சிறந்த பேறு. அதுவே வீடு பேறு.
அந்த வீடு என்பது இறைவனின் பாதார விந்தமா, இறைவனோடு ஒன்றிணைவதா, அல்லது இயற்கையோடு கலந்துவிடுவதா என்பது வேறு ஆய்வுக்கான விஷயங்கள். ஆயினும் உடலில் இருந்து வேறுபட்ட ஓர் சக்தி, தன்மை இந்த உடலுக்குள் உறைகிறது. அந்த ஆன்மா எனப்படும் ஆத்மாவை உண்டு என்று ஏற்பதே ஆத்திகம். அவ்வாறு ஆத்மா ஏதும் இல்லை என்று மறுப்பதே நாத்திகம். மேலைநாட்டுத் தத்துவங்கள் அல்லது வெளி மதக் கோட்பாடுகளைப்போல் இந்தியாவில் ஆண்டவனை மறுப்பதற்குப் பெயர் அல்ல நாத்திகம், ஆன்மாவை மறுப்பதே நாத்திகம் எனப்படும். அதனால்தான் ஆண்டவனை மறுக்கின்ற அல்லது உறுதிப்படுத்தாத சமணம், பௌத்தம் ஆகிய இந்தியச் சமயத் தத்துவங்கள் தங்களை ஆத்திகவாதிகள் என்றும் லோகாயதம் அல்லது சார்வாகக் கருத்தைச் சார்ந்தவர்களையே நாத்திகவாதிகள் என்றும் கூறுகின்றன.
லோகாயதமும் சார்வாகமும் வேறு வேறா அல்லது ஒன்றா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. தொடக்கத்தில் இரண்டும் வேறு வேறாக இருந்திருக்கலாம் என்றும் ஆண்டவன் மறுப்பு, ஆன்ம மறுப்பு, இன்பவியல் கோட்பாடு ஆகிய ஒத்த கருத்துகளால் காலப்போக்கில் இரண்டும் ஒன்று கலந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சரி, ஆண்டவனை ஏற்பவர்களோடு ஆண்டவனை மறுக்கின்றவர்களும் நாத்திகம் என்று கூறுகின்ற லோகாயதம் அல்லது சார்வாகம் என்பது என்ன? லோகாயதம் என்ற சொல், லோகம் ஆயதம் என்ற இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும். லோகம் என்பது பொருட்களால் ஆன இந்த உலகத்தைக் குறிப்பது. ஆயதம் என்றால் நடைமுறை சார்ந்தது என்று பொருள். ஆக, லோகாயதம் என்பது, பொருள் சார்ந்ததே உலகம் என்று கூறுகிற தத்துவமாகும். உலகில் முதன்முதலில் பொருள்முதல் வாதம் பேசிய தத்துவம் இதுவாகத்தான் இருக்கும். இது இன்றைய கம்யூனிஸத்துக்கு முன்னோடியாகும்.
சார்வாகம் என்ற சொல், சாரு வாக் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டாகும். சாரு என்றால் கவர்ச்சிகரமான, கவரக்கூடிய வகையில் என்றும், வாக் என்றால் வார்த்தைகள் என்றும் அர்த்தம். ஆக, சாருவாகம் என்றால் கவர்ச்சிகரமான வார்த்தைகளைப் பேசுகின்ற தத்துவம் என்று பொருள். இன்றுவரை கடவுள் இல்லை என்று கூறுபவர்களின் வார்த்தைகள் கவர்ச்சிகரமாகத்தானே இருக்கின்றன. லோகாயதம், சார்வாகம் ஆகிய பெயர்களிலே சுட்டப்படுகின்ற நாத்திக வாதத்தின் சாரம், “உலகின் தோற்றம் இயற்கையானது, உடலைத் தாண்டி ஆன்மா என்று எதுவுமில்லை, உலகைத் தாண்டி சொர்க்கம் - நரகமோ ஆண்டவனோ எதுவுமில்லை” என்பதே.
“இந்த உலகில் உள்ள எல்லாமே பொருட்களால் ஆனவை. ஆகையால், பொருட்களின் சேர்க்கையே இந்த உலகுக்கும், பிரபஞ்சத்துக்கும் அவற்றில் காணப்படும் உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் காரணம்” என்கிறது லோகாயதம்.
நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்கள் (அதாவது பொருள் மூலங்கள்) சேர்ந்து உருவானதே இந்த உலகம். இந்த உடல், உலகில் தோன்றிய பொருட்களின் சேர்க்கையால் உருவாகிறது. இதில் ஏற்படும் புத்தி, ரசாயனங்கள் போன்ற பொருட்களின் சேர்க்கையால் உருவாவது. இதைத் தாண்டி உயிர் என்றோ, ஆன்மா என்றோ எதுவும் இல்லை. உடல்தான் உயிர். உடல் அழிந்ததும் உயிரும் அழிந்துவிடுகிறது. அது ஆன்மா என்ற பெயரில் தனியாகப் பிரிந்து, மறு பிறப்பையோ முக்தியையோ அடைவதில்லை. உடல் அழிந்தால் உயிரும் அழியும் அவ்வளவே என்கிறது லோகாயதம்.
இதனை தேகாத்மவாதம், பூதசைதன்யவாதம் என்றும் கூறுவார்கள். தேகமே ஆத்மா என்று வாதிடுவதால் தேகாத்மவாதம் என்றும், பொருள்களின் மூலங்களான பூதங்களின் சேர்க்கையால் சைதன்யம் எனப்படும் அறிவு தோன்றுவதாக வாதிடுவதால் பூதசைதன்யவாதம் என்றும் இதற்குப் பெயர்கள் அமைந்தன.
ஆகாயம் என்ற ஐந்தாவது பூதத்தை லோகாயதர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனைய இந்தியத் தத்துவங்கள், பிரத்யட்சம் (கண்ணால் காண்பது அல்லது நேரடியாக உணர்வது), ஊகம், ஆப்த வசனம் (நம்பத் தகுந்தவர்கள் கூறுகின்ற வாக்கு அல்லது ஏற்கெனவே ஆய்ந்து அறிந்தவர்கள் கூறுகின்ற வாக்கு) ஆகிய மூன்றையும் எந்தவொரு விஷயத்தையும் நிரூபிப்பதற்கான பிரமாணங்களாக (அடிப்படைகளாக) ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் லோகாயதம் என்றும் சார்வாகம் என்றும் சுட்டப்படுகின்ற நாத்திகம், பிரத்யட்சத்தை மட்டுமே பிரமாணமாக எடுத்துக்கொள்கிறது. ஆகையால், கண்ணால் காண முடியாத, ஊகத்தால் அறியக்கூடிய, உடல் அற்றது என்று பொருள்படக்கூடிய ஆகாயத்தை ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாக லோகாயதர்கள் ஏற்பதில்லை. (அவர்களுக்கு காயமே (உடலே) உயிர் எனும்போது, ஆகாயம் எப்படி ஏற்புடையதாக இருக்கும்?) எனினும், உண்மையை நிரூபிக்க பிரத்யட்சம் மட்டுமே போதாது. ஊகமும், ஆப்தவசனமும் அதற்குத் தேவை என்று பிற தத்துவங்கள் வாதிட்டு, தங்களை நிலைநிறுத்திக்கொள்கின்றன.
“வாழ்வது ஒருமுறை; வாழுங்கள் கவர்ச்சியாய்” என்றொரு ஆடை விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிரபலம். அதேபோல்தான், லோகாயதர்களும் “வாழ்வது ஒருமுறை; அதனை இன்பமாகக் களியுங்கள். இதில் லட்சியம் (அதாவது முக்தியை அடைவது) என்று எதுவுமில்லை” என்று கூறுகிறார்கள். அந்த வகையில், இதனை இன்பவியல் கோட்பாடு, நுகர்வுக் கோட்பாடு என்றும் கூறலாம்.
நன்கு புசியுங்கள், மது குடித்துக் களியுங்கள், வேண்டுமளவுக்கு கலவியின்பம் புரியுங்கள் என்று வரையில்லா இன்ப நுகர்வை லோகாயதம் வலியுறுத்துவதாக சமணம், பௌத்தம், வைதீகம் (வேதம் சார்ந்த தத்துவங்கள்) உள்ளிட்ட இதர சமயங்கள், தத்துவங்களை எடுத்துரைக்கும் நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த வரையற்ற இன்ப விழைவு காரணமாக, லோகாயதர்கள் ஒழுக்கமற்றவர்களாக இருந்தார்கள் என்று கூறி, பிற மத நூல்கள் இவர்களைக் கண்டிக்கின்றன.
லோகாயதத்தைப் பின்பற்றுபவர்களின் தவறான நடத்தை காரணமாக அவர்கள் கண்டிக்கப்பட்டாலும்கூட, லோகாயத தத்துவத்தை முற்றிலுமாக பாரதீய மெய்ஞானம் புறக்கணித்துவிடவில்லை. முக்கிய இடம் தந்து கௌரவித்துள்ளது. முற்காலத்தில் வேதங்களைப் படித்து தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், முக்கியமான மூன்று தத்துவங்களைப் படித்திருக்க வேண்டும். த்ரையீ என்றழைக்கப்படும் அந்த மூன்று தத்துவங்கள் லோகாயதம், சாங்கியம், நியாயம் (லாஜிக்) ஆகியவையே. ஆன்வீக்ஸி எனப்படும் தர்க்கவாதக் கலையில் இந்த மூன்றும் கற்றுக்கொடுக்கப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் எடுத்துரைக்கிறது.
இக்காலத்தில் நாத்திகமும் பிராமணீயமும் இருவேறு துருவங்களாக இருக்கின்ற நிலையில், முற்காலத்தில் நாத்திகத்தை வளர்த்தெடுத்தவர்கள் பிராமணர்கள் என்பது ஆச்சரியகரமான உண்மை. இந்த முரண் சுவையை அடுத்த வாரம் ருசிப்போம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...